Monday 20 March 2017

ஒரு சிங்கப்பூர் சிட்டிசனின் தில்லாலங்கடிகள் - தினகரன் ஆகிய நான் - பகுதி 3



 
ஒரு சிங்கப்பூர் சிட்டிசனின் தில்லாலங்கடிகள்
---
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு என்றதும் நமக்கு ஞாபகம் வருவது, அவ்வழக்கை 21 ஆண்டுகள் ஜவ்வாய் இழுத்த கதை தான். கர்நாடக வழக்கறிஞர் திரு.ஆச்சாரியாவே கண்ணீர் விட்டு கதறும்படியான நிலை இருந்தது. அதற்கு சற்றும் குறைவில்லாதது தான் டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலவாணி வழக்குகளும். 


1995-ல் ஆரம்பித்த இந்த வழக்குகளில், கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கடந்தும் அவர் மீதான ஒரேயொரு வழக்கிற்கு மட்டும் தான் இதுவரை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் உயர்நீதிமன்றத்தில் தான்; இன்னும் உச்சநீதிமன்றம் வேறு மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள வழக்குகளில், இன்னமும் விசாரணையைக் கூட முழுமையாக முடித்திடாமல் அமலாக்கத் துறைக்கு ‘தண்ணி காட்டி’ வருவதெல்லாம் என்னவென்று புகழ்வது.! 

1995-ல் அமலாக்கத் துறை, டிடிவி தினகரன் மீது ஹவாலா முறைகேடுகள் குறித்து நோட்டீஸ் அனுப்பியதும், ஓடிச்சென்று அதனை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டிவிசன் அமர்வு இதனை தள்ளுபடி செய்ய, மீண்டும் அதே நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விடம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த முறையும் அமலாக்கத்துறையின் ஆணையை ரத்து முடியாது என கண்டிப்புடன் கூறவே, வேறுவழியின்றி நேரில் ஆஜரானார். பின்னர், 1996-ல் COFEPOSA எனும் அந்நியச் செலவாணி முறைகேடு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவுகளில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் ஓராண்டுக்கு சிறை வைக்கப்பட, ஊரே பார்க்கும்படி ‘ஆடம்பரமாக’ கைதான இவரை மீட்கக்கோரி, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் தினகரன் மனைவி அனுராதா. 

இப்படி, இவ்வழக்குகள் ஆரம்பிக்கும் முன்னரே நான்கைந்து வழக்குகள் கடந்துதான் விசாரணையையே எதிர்கொண்டார் இந்த பெருமகனார். இந்த காலகட்டத்தில் தான், முந்தைய பதிவில் தெரிவித்த அனைத்து அந்நியச் செலவாணி முறைகேடு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதில் ஒரு கோடி டாலர் முறைகேடு வழக்கில், 1998-ம் ஆண்டு ரூ.31 கோடி அபராதமும், முறைகேடாக வாங்கிக்குவித்த ரூ.68 கோடி மதிப்பிலான இவரது வெளிநாட்டு சொத்துக்களை இந்தியாவிற்கு கொண்டுவரவும் உத்தரவிடப்பட்டது. இதற்கு டெல்லி அமலாக்கத் துறையில் மேல்முறையீடு செய்ய, அபராதத் தொகையை மட்டும் ரூ.28 கோடியாக குறைத்து உத்தரவிட்டது. மீண்டும் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு, இடைக்காலத் தடை உத்தரவு என முட்டுக்கொடுத்தார்.

இந்த வழக்கில்தான், ‘அம்மா சத்தியமா நானு சிங்கப்பூர் சிட்டிசனுங்க’ என 20 வருடங்களாக சினுங்கிக் கொண்டிருந்தார். அந்நியச் செலவாணி வழக்கு இந்திய குடிமகன்களுக்கே பொருந்தும் என்பதால் அண்ணாரது ராஜதந்திரம் அப்படி. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த வழக்கு நடைபெற்றக் கொண்டிருக்கும்போதே இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினரானார். ‘ஒரு சிங்கப்பூர் சிட்டிசன் இந்தியாவில் எம்பி ஆவதா?’ என சுப்பிரமணிய சாமி (அவரேதான்) வழக்கு தொடர, தான் இந்தியக் குடிமகன் என இம்முறை வாதிட்டார். இவரது தில்லாலங்கடிகளை கவனித்த நீதிபதிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இதற்கிடையில், 1998-ல் வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் தன் கைவரிசையை காட்டினார், தம்பிதுரை எனும் ‘தலைமை அடிமை’.

1998-99ல் அமைந்த பாஜக ஆட்சியில் முக்கிய பங்கு வகித்த அதிமுக, சட்டத்துறை மற்றும் நிதித்துறையின் வருவாய்த்துறை தனிப்பொறுப்பு உள்ளிட்ட இலாக்காக்களை கேட்டு வாங்கியது. இதன்படி மத்திய சட்ட அமைச்சரானார் தம்பிதுரை. மேற்குறிப்பிட்ட அந்நியச் செலவாணி வழக்குகளை விசாரித்து வந்த அமலாக்கத் துறை மத்திய வருவாய்த்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் அமைப்பு. அதன் அமைச்சராக இருந்த ஆர்கே குமாரும், தம்பிதுரையும் செய்த முதல் வேலையே இந்த வழக்குகளுக்காக வாதாடி வந்த மூத்த வழக்கறிஞர் திரு.வி.டி.கோபாலன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழு 33 பேரை ஒரே மூச்சில் மாற்றியமைத்து, அதிமுக வழக்கறிஞர்களை நியமித்ததுதான். அவர்கள் நேர்மை நம்மை கண்கலங்க வைக்கின்றதல்லவா.!

இதுபோக, தினகரன் ஆஜராகிய பொருளாதார குற்றவியல் நடுவர் அமர்வில் அதிமுக சார்பு நீதிபதிகளை கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தனர். இதில் எதிர்பாராத விதமாக கடைசி நிமிடத்தில் நீதிபதி மாறிவிட, மாட்டிக்கொண்டார் தினகரன். மேலும், அவ்வழக்குகளை விசாரித்து வந்த விசாரணை குழுவையும் முற்றிலும் மாற்றியமைக்க முயற்சித்தார், அப்போதைய சட்டத்துறை அமைச்சர் தம்பிதுரை. ஆனால், அதற்கு பிரதமர் வாஜ்பாய் முட்டுக்கட்டை போட, இறுதியில் அதிமுகவினர் தங்களது ஆதரவை விலக்கி, மத்தியில் ஆட்சியையே கலைத்தனர். இவர்களது விசுவாசம் நம்மை புல்லரிக்க வைக்கலாம்.! ஆனால், தினகரன் இப்படி ‘தனது மொத்த வித்தையை இறக்கிய’ வழக்கில் தான் கடந்த ஜனவரியில் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தோ பரிதாபம்.! இன்னும் அப்பீல் செய்ய உச்சநீதிமன்றம் பாக்கியுள்ளது என்பது, அவருக்கு கொஞ்சம் உற்சாகம் தரலாம்.

இந்த வழக்கு ஒரு உதாரணம் மட்டுமே. மற்ற அந்நியச் செலவாணி வழக்குகளை எடுத்துக்கொண்டால், வழக்கிற்கு மேல்முறையீடு, மேல்முறையீட்டுக்கு மேல்முறையீடு, வழக்கை நிறுத்திவைக்க வழக்கு, வழக்கிலிருந்து விடுவிக்க வழக்கு என அத்தனை முயற்சியும் செய்து, 20 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வழக்குகள் அனைத்திற்கும், தினகரனின் ஆயுட்காலத்திற்குள் தீர்ப்பு வரும் என ‘அந்த மெரினா சமாதி’ மீது ஆணையாக நம்புவோம். இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் இன்னும் தினகரன் மீது நிலுவையிலுள்ள வழக்குகளின் சரியான எண்ணிக்கை, இரண்டா மூன்றா அல்லது இருபதா முப்பதா என்ற தகவல் ஊடகங்களில் கூட இல்லை. ஒருவேளை அவர் விருப்பப்பட்டால், ஆர்கே நகர் வேட்புமனுவில் ‘அந்த மர்ம தகவல்’ கிடைக்கும் என நம்புவோம்.

(தொடரும்..)

No comments:

Post a Comment