Thursday 23 March 2017

ஆர்கே நகரில் தமிழகத்தின் எதிர்காலம் - தினகரன் ஆகிய நான் - பகுதி 4


1995, 96-களில் தினகரன் மீது வழக்குகள் பதியப்படும்போது, ஆதாரங்கள் அடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள இவரது சொத்துமதிப்பு ரூ.60 கோடி அளவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உண்மையில் அவரது சொத்துமதிப்பு (அப்போதைய மதிப்பில்) சில நூறு கோடிகளைத் தாண்டும் என்றும், அதுபற்றி விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. அந்த விசாரணையில் தான் ரூ.280 கோடி மதிப்பிலான லண்டன் ஹோட்டல் இவர் பெயரில் இருந்தது தெரிய வந்தது. ஆனால், 2004 நாடாளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் போது தனது சொத்து மதிப்பு ரூ 1.15 கோடி மட்டுமே என தெரிவித்திருந்தார். தற்போது ஆர்கே நகர் தேர்தல் வேட்புமனுவில் ரூ.16.17 கோடி மட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தனது வருமானம் பற்றியோ சிங்கப்பூர் சவகாசம் பற்றியோ எந்த தகவலும் அவர் தனது எந்த வேட்புமனுக்களிலும் தெரிவிக்கவில்லை. ஆனால் இவர் பெயரில் கருப்பு பணம் பதுக்கலுக்கு பெயர் போன பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில், டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ், பேன்யன் ட்ரீ என்டர்பிரைசஸ், டர்கீ என்டர்பிரைசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளதாக இவரது வழக்குகளில் கூறப்பட்டுள்ளது. அவைகள் மூலமாக, சட்டத்திற்கு புறம்பான பணப்பரிமாற்றத்தில் தினகரன் ஈடுபட்டுள்ளதாகவும் மிகத்தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், அண்ணாரது தொழில் என்ன என்பது வெளிப்படையாக தெரிய வருகின்றனது.

இந்த கருப்புப்பண கைவரிசையை எப்படி செய்தார் என்று அமலாக்கத் துறை கண்டறிந்தது. இதையெல்லாம் ஜெயவுக்காகத் தான் செய்தார் என்பது ஊருக்கே தெரிந்தும், அதற்கான வழக்குகள் ஏதுமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. காரணம் முதலாம் குற்றவாளியின் அரசியல் தலையீடா அல்லது இவரது அதிர்ஷடமா என தெரியவில்லை. தினகரன் மீதான வழக்குளில் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவல் - இவையாவும் FERA மற்றும் COFEPOSA என்றழைக்கப்படும் அந்நியச் செலவாணி முறைகேடுகள் மற்றும் கடத்தல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் உள்ள வழக்குகள். இவைகள், இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் குற்றங்களாக கருதப்படும் அளவிற்கு கடுமையான குற்றங்கள்.

இத்தகைய குற்றஞ்சாட்டப்பட்ட யோக்கியரைத் தான், கருப்பு பணங்களை வெள்ளையாக்குவதில் தனித்திறமை பெற்ற வித்தகரைத் தான் அடுத்த முதல்வராக அதிமுகவினர் கைகாட்டுகின்றனர்.

ஆனால் ஒரு உண்மையை மட்டும் நாமும் ஒத்துக்கொள்ள வேண்டும் - இல்லாத நிறுவனங்களுக்கு கணக்கு காண்பிப்பது, இயங்காத நிறுவனங்களில் கோடிக்கணக்கில் லாபம் பார்ப்பது, வரையறை இல்லாமல் கண்ணில்படும் சொத்துக்கள் யாவையும் வாங்கிக்குவிப்பது, எல்லாவிதமான நீதிமன்றங்களிலும் ஏறி இறங்கியது, எந்தவித குற்றவுணர்வும் இன்றி வழக்குகளை எல்லாம் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பது என செல்வி.ஜெயலலிதாவின் அத்தனை அம்சங்கள் பொருந்திய இவரே, அவரது உண்மையான அரசியல் வாரிசாக இருக்க முடியும்.

முன்பெல்லாம், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்கள், மக்களுக்காக வாழ்ந்தவர்கள், தமிழகத்தின் நலன்சார்ந்து சிந்திக்கக் கூடியவர்களே அரசியல்வாதிகள் ஆயினர். அதன்பிறகு, அரசியலுக்கு வந்த பிறகு கிடைக்கும் இடங்களில் காசு பார்க்கும், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் தமிழகத்தை ஆண்டு வந்துனர். ஆனால், தற்போதெல்லாம் கொள்ளையடிப்பதிலும் சட்டத்தை ஏமாற்றுவதிலும் 20 வருடங்களுக்கு மேலாக முன்னனுபவம் பெற்றவர்களே தமிழகத்தின் அடுத்த முதல்வர் என அடித்துக் கொள்கின்றனர்.

முதலில், மன்னார்குடி மாஃபியாவின் தலைவி முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் போது, இது தமிழகத்திற்கு ஏற்படும் பேராபத்து என தடுக்க போராடினோம். இறுதியில் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் தமிழகத்தை காப்பாற்றியது. அடுத்ததாக அதே குடும்பத்தின் மற்றுமொரு உத்தமர் ஒருவர் தமிழகத்தை ஆள நினைக்கிறார்.இம்முறை ஆர்கே நகர் மக்களின் தீர்ப்பை நம்பி தான் மொத்த தமிழகமும் காத்துக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக தனது மொத்த பண பலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தி அந்த எட்டாக்கனியை கைப்பற்ற துடித்துக் கொண்டிருப்பார்.

இன்னும் சில தினங்களுக்கு அத்தொகுதியில் கணக்கில்லாமல் காசு வாரி இறைக்கப்படும். கொள்ளையடித்து சேர்த்த அத்தனை பாவப்பணங்களும் வீடு வீடாக சென்றடையும்,மக்களையும் அக்கொள்ளையில் பங்காளிகள் ஆக்க.. தற்போதைக்கு நம் அத்தனை பேரின் நம்பிக்கையும் அத்தொகுதி மக்களிடம் மட்டும் தான். ஆனால், அவர்களோ “அட போங்க தம்பி, நாங்க மொத அக்கியூஸ்ட்டையே ஜெயிக்க வச்சவங்க. இவரென்னவோ அஞ்சாவது அக்கியூஸ்ட் தானே” என வாக்களிப்பார்களா, இல்லை “ஐயோ, நாங்க இப்ப சுத்தமா திருந்திட்டோம் பாஸூ” என்று அம்மக்கள் சொல்லப் போகிறார்களா, என்பது ஏப்ரல் 15 அன்று தான் தெரியும்.

அதுவரை “டிடிவி தினகரன் ஆகிய நான்…” என்று தினமும் அவர் தன் கனவினில் பேசி மகிழட்டும்.

(முற்றும்)

Monday 20 March 2017

ஒரு சிங்கப்பூர் சிட்டிசனின் தில்லாலங்கடிகள் - தினகரன் ஆகிய நான் - பகுதி 3



 
ஒரு சிங்கப்பூர் சிட்டிசனின் தில்லாலங்கடிகள்
---
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு என்றதும் நமக்கு ஞாபகம் வருவது, அவ்வழக்கை 21 ஆண்டுகள் ஜவ்வாய் இழுத்த கதை தான். கர்நாடக வழக்கறிஞர் திரு.ஆச்சாரியாவே கண்ணீர் விட்டு கதறும்படியான நிலை இருந்தது. அதற்கு சற்றும் குறைவில்லாதது தான் டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலவாணி வழக்குகளும். 


1995-ல் ஆரம்பித்த இந்த வழக்குகளில், கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் கடந்தும் அவர் மீதான ஒரேயொரு வழக்கிற்கு மட்டும் தான் இதுவரை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் உயர்நீதிமன்றத்தில் தான்; இன்னும் உச்சநீதிமன்றம் வேறு மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள வழக்குகளில், இன்னமும் விசாரணையைக் கூட முழுமையாக முடித்திடாமல் அமலாக்கத் துறைக்கு ‘தண்ணி காட்டி’ வருவதெல்லாம் என்னவென்று புகழ்வது.! 

1995-ல் அமலாக்கத் துறை, டிடிவி தினகரன் மீது ஹவாலா முறைகேடுகள் குறித்து நோட்டீஸ் அனுப்பியதும், ஓடிச்சென்று அதனை ரத்துசெய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டிவிசன் அமர்வு இதனை தள்ளுபடி செய்ய, மீண்டும் அதே நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்விடம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த முறையும் அமலாக்கத்துறையின் ஆணையை ரத்து முடியாது என கண்டிப்புடன் கூறவே, வேறுவழியின்றி நேரில் ஆஜரானார். பின்னர், 1996-ல் COFEPOSA எனும் அந்நியச் செலவாணி முறைகேடு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவுகளில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் ஓராண்டுக்கு சிறை வைக்கப்பட, ஊரே பார்க்கும்படி ‘ஆடம்பரமாக’ கைதான இவரை மீட்கக்கோரி, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் தினகரன் மனைவி அனுராதா. 

இப்படி, இவ்வழக்குகள் ஆரம்பிக்கும் முன்னரே நான்கைந்து வழக்குகள் கடந்துதான் விசாரணையையே எதிர்கொண்டார் இந்த பெருமகனார். இந்த காலகட்டத்தில் தான், முந்தைய பதிவில் தெரிவித்த அனைத்து அந்நியச் செலவாணி முறைகேடு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதில் ஒரு கோடி டாலர் முறைகேடு வழக்கில், 1998-ம் ஆண்டு ரூ.31 கோடி அபராதமும், முறைகேடாக வாங்கிக்குவித்த ரூ.68 கோடி மதிப்பிலான இவரது வெளிநாட்டு சொத்துக்களை இந்தியாவிற்கு கொண்டுவரவும் உத்தரவிடப்பட்டது. இதற்கு டெல்லி அமலாக்கத் துறையில் மேல்முறையீடு செய்ய, அபராதத் தொகையை மட்டும் ரூ.28 கோடியாக குறைத்து உத்தரவிட்டது. மீண்டும் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு, இடைக்காலத் தடை உத்தரவு என முட்டுக்கொடுத்தார்.

இந்த வழக்கில்தான், ‘அம்மா சத்தியமா நானு சிங்கப்பூர் சிட்டிசனுங்க’ என 20 வருடங்களாக சினுங்கிக் கொண்டிருந்தார். அந்நியச் செலவாணி வழக்கு இந்திய குடிமகன்களுக்கே பொருந்தும் என்பதால் அண்ணாரது ராஜதந்திரம் அப்படி. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த வழக்கு நடைபெற்றக் கொண்டிருக்கும்போதே இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினரானார். ‘ஒரு சிங்கப்பூர் சிட்டிசன் இந்தியாவில் எம்பி ஆவதா?’ என சுப்பிரமணிய சாமி (அவரேதான்) வழக்கு தொடர, தான் இந்தியக் குடிமகன் என இம்முறை வாதிட்டார். இவரது தில்லாலங்கடிகளை கவனித்த நீதிபதிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இதற்கிடையில், 1998-ல் வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் தன் கைவரிசையை காட்டினார், தம்பிதுரை எனும் ‘தலைமை அடிமை’.

1998-99ல் அமைந்த பாஜக ஆட்சியில் முக்கிய பங்கு வகித்த அதிமுக, சட்டத்துறை மற்றும் நிதித்துறையின் வருவாய்த்துறை தனிப்பொறுப்பு உள்ளிட்ட இலாக்காக்களை கேட்டு வாங்கியது. இதன்படி மத்திய சட்ட அமைச்சரானார் தம்பிதுரை. மேற்குறிப்பிட்ட அந்நியச் செலவாணி வழக்குகளை விசாரித்து வந்த அமலாக்கத் துறை மத்திய வருவாய்த்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படும் அமைப்பு. அதன் அமைச்சராக இருந்த ஆர்கே குமாரும், தம்பிதுரையும் செய்த முதல் வேலையே இந்த வழக்குகளுக்காக வாதாடி வந்த மூத்த வழக்கறிஞர் திரு.வி.டி.கோபாலன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழு 33 பேரை ஒரே மூச்சில் மாற்றியமைத்து, அதிமுக வழக்கறிஞர்களை நியமித்ததுதான். அவர்கள் நேர்மை நம்மை கண்கலங்க வைக்கின்றதல்லவா.!

இதுபோக, தினகரன் ஆஜராகிய பொருளாதார குற்றவியல் நடுவர் அமர்வில் அதிமுக சார்பு நீதிபதிகளை கொண்டுவர ஏற்பாடு செய்திருந்தனர். இதில் எதிர்பாராத விதமாக கடைசி நிமிடத்தில் நீதிபதி மாறிவிட, மாட்டிக்கொண்டார் தினகரன். மேலும், அவ்வழக்குகளை விசாரித்து வந்த விசாரணை குழுவையும் முற்றிலும் மாற்றியமைக்க முயற்சித்தார், அப்போதைய சட்டத்துறை அமைச்சர் தம்பிதுரை. ஆனால், அதற்கு பிரதமர் வாஜ்பாய் முட்டுக்கட்டை போட, இறுதியில் அதிமுகவினர் தங்களது ஆதரவை விலக்கி, மத்தியில் ஆட்சியையே கலைத்தனர். இவர்களது விசுவாசம் நம்மை புல்லரிக்க வைக்கலாம்.! ஆனால், தினகரன் இப்படி ‘தனது மொத்த வித்தையை இறக்கிய’ வழக்கில் தான் கடந்த ஜனவரியில் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தோ பரிதாபம்.! இன்னும் அப்பீல் செய்ய உச்சநீதிமன்றம் பாக்கியுள்ளது என்பது, அவருக்கு கொஞ்சம் உற்சாகம் தரலாம்.

இந்த வழக்கு ஒரு உதாரணம் மட்டுமே. மற்ற அந்நியச் செலவாணி வழக்குகளை எடுத்துக்கொண்டால், வழக்கிற்கு மேல்முறையீடு, மேல்முறையீட்டுக்கு மேல்முறையீடு, வழக்கை நிறுத்திவைக்க வழக்கு, வழக்கிலிருந்து விடுவிக்க வழக்கு என அத்தனை முயற்சியும் செய்து, 20 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வழக்குகள் அனைத்திற்கும், தினகரனின் ஆயுட்காலத்திற்குள் தீர்ப்பு வரும் என ‘அந்த மெரினா சமாதி’ மீது ஆணையாக நம்புவோம். இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால் இன்னும் தினகரன் மீது நிலுவையிலுள்ள வழக்குகளின் சரியான எண்ணிக்கை, இரண்டா மூன்றா அல்லது இருபதா முப்பதா என்ற தகவல் ஊடகங்களில் கூட இல்லை. ஒருவேளை அவர் விருப்பப்பட்டால், ஆர்கே நகர் வேட்புமனுவில் ‘அந்த மர்ம தகவல்’ கிடைக்கும் என நம்புவோம்.

(தொடரும்..)

ரூ.77.7 கோடி மதிப்பிலான அந்நிய செலவாணி மோசடிகள் - தினகரன் ஆகிய நான் - பகுதி 2

ரூ.77.7 கோடி மதிப்பிலான அந்நிய செலவாணி மோசடிகள்
--
டிடிவி தினகரனது பின்னணி பற்றி கடந்த பதிவில் தெரிவித்திருந்தோம். அதையும் தாண்டி அவருக்கென சில அருமை பெருமைகள் உண்டு. அண்ணாரது தனிச்சிறப்பு என்னவென்றால், கணக்கு வழக்கே இல்லாமல் சகட்டு மேனிக்கு அமலாக்கப் பிரிவினரிடம் சிக்கினாலும், இன்று வரை வெற்றிகரமாக 22 ஆண்டுகளாக அந்த வழக்கையெல்லாம் இழுத்துக்கொண்டே வருகின்றார். இந்த விவகாரத்தில் செல்வி.ஜெயலலிதாவிற்கே இவர் ஆலோசனையாளராக இருந்திருக்கலாம். கடந்த ஜனவரி 6-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இவருக்கு ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்ப்பட்ட வழக்கு கூட, இவ்வகையில் அவர்தம் மணிமகுடத்தில் ஒன்று தான். திரு.தினகரனது வழக்குகளை பற்றி விவரிக்கும் ஒரு ஆங்கில பத்திரிகை “தனது கையில் புரளும் கோடிகள் குறித்து கணக்கிட நேரமில்லாததால் மாட்டிக்கொண்டவர்” என அழகாக வர்ணிக்கிறது (http://indiatoday.in/story/as-offenders-go-t.t.v.-dinakaran-is-from-a-privileged-category/1/289670.html).

1992-ம் ஆண்டு, தமிழக அரசியலில் மன்னார்குடி மாபியா செல்வாக்கோடு சுற்ற ஆரம்பித்த காலத்தில் எழுந்த முதல் புகாரே அண்ணார் மேல் தான். இவரது எமரால்ட் நிறுவனம், சென்னை நகரின் முக்கிய பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கண்டனக் குரல்கள் எழுந்தன. உடனடியாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எடுத்த ‘கடுமையான’ நடவடிக்கையால், அந்த வழக்கு என்னவானது என்றே தெரியாமல் போனது. அதன் பின்னர் 1995-ல் எழுந்தது தான், ஹவாலா என்னும் அந்நிய செலவாணி மோசடி வழக்குகள். இவர் இந்த வழக்கில் சிக்கியது கூட ‘காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை’ தான். அக்காலத்தில் பிரசித்திபெற்ற ஜெயின் ஹவாலா மோசடி வழக்கில், சென்னையை சேர்ந்த அமீர் என்ற முக்கியப்புள்ளி சிக்க, அவரது அலுவலகத்தில் கிடைத்த கோப்புகளில் ஒன்று தான் தினகரன் மீதுள்ள அந்நியச் செலவாணி வழக்கின் ஆரம்பம்.

அதென்ன அந்நியச் செலவாணி, ஹவாலா மோசடி.. என்கிறீர்களா? இந்தியாவில் ரூபாயாக சம்பாதித்த பணத்தை வெளிநாட்டில் அந்தந்த நாட்டு பணமாக மாற்றவும், வெளிநாட்டு பணத்தை இந்திய ரூபாயாக மாற்றவும் அரசு நிறுவனங்கள், அரசு ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள் மூலமே செய்ய முடியும். பொதுவாக, கருப்பு பணமாக வருமானத்தில் காட்டாமல் சட்டத்திற்கு புறம்பாக சேர்க்கப்படும் அனைத்து பணமும் இம்மாதிரியாக வெளிநாடுகளில் பதுக்கிவைக்க இந்த வழியை பின்பற்ற முடியாது. வெளிநாடுகளில் இதற்கென செயல்படும் இடைத்தரகர்கள் மூலம் இந்த கருப்பு பணங்கள் வெளிநாட்டு பணமாக அந்தந்த நாட்டில் மாற்றப்படும். பின்னர் அதையே நன்கொடையாகவோ, இல்லாத நிறுவனங்கள் மீதான முதலீடாகவோ வெள்ளையாக திரும்ப இந்தியாவிற்குள் கொண்டுவரப்படும். இந்த அரிய சேவையைத் தான் முன்னாள் முதல்வருக்கு டிடிவி.தினகரன் செய்து வந்தார் என்கிறது அமலாக்கத்துறை.

இப்படியான, இந்த அந்நியச் செலவாணி மோசடி வழக்கு ஒன்றல்ல, இரண்டல்ல.. மொத்தம் ஐந்து வழக்குகள், தினகரன் மீது. அன்றைய மதிப்புகள்படி இதன் மொத்த மதிப்பு 77 கோடியே 70 லட்சம் ரூபாய் (கொஞ்சம் கம்மிதானோ..!). இதுபோக, இவ்வழக்கு சம்பந்தப்பட்ட மேலும் இரண்டு வழக்குகள் என இவர்மீது மொத்தம் ஏழு வழக்குகள், 2004 நாடாளுமன்ற தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவின் படி. அந்த வழக்குகளின் விவரம் பின்வருமாறு:

● 1991-95ல் ஒரு கோடியே நான்கு லட்சம் டாலர் ($10,493,313) மற்றும் நாற்பத்தி நான்கு லட்சம் பவுண்ட் (€44,37,242.90) அளவிலான அந்நியச் செலவாணி முறைகேடு (E.O.C.C 27/1996) வழக்கு,
● 1994-95ல் நான்கு லட்சம் டாலர் ($477,760) மதிப்பிலான அந்நியச் செலவாணி முறைகேடு (E.O.C.C 81/2001) வழக்கு
● அதே காலகட்டத்தில் $90,000 டாலர் மதிப்பிலான அந்நியச் செலவாணி (E.O.C.C 82/2001) வழக்கு
● பத்து லட்சம் டாலர் ($1,000,000) மதிப்பிலான அந்நியச் செலவாணி (E.O.C.C 83/2001) வழக்கு
● மேலும் 36 லட்சம் டாலர் ($3,636,000) மற்றும் ஒரு லட்சம் பவுண்ட் (€1,00,000) மதிப்பிலான மற்றுமொரு வழக்கு
● இவையெல்லாம் போக, லண்டன் ஹோட்டல் வழக்கு மூலம் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஐந்தாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்

இதில் மேற்குறிப்பிட்ட முதல் வழக்கை எடுத்துக்கொண்டால், அமெரிக்கா அருகிலுள்ள பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் என்ற கண்காணாத தேசத்தில் டிப்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (Dipper Investments) என்ற பெயரில் 90-களில் ஒரு நிறுவனம் நடத்திவந்த தினகரன், அதற்கு இங்கிலாந்தில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் (Barclays Bank) இருந்து, ஒரு கோடியே நான்கு லட்சம் டாலர் மதிப்பிலான பண பரிவர்த்தனை செய்கிறார். இது அந்நியச் செலவாணி முறைப்படுத்துதல் சட்டம் (FERA Act) பிரிவு 8(1)-ன் படி குற்றம். மேலும் மீர் (Meer), கேர் அண்ட் தேசாய் (Care and Desai) என்ற நிறுவனங்களுக்கு 43 லட்சம் பவுண்ட், வெஸ்ட்பேக் லிமிடட் (Westback Ltd) நிறுவனங்களுக்கு 90 ஆயிரம் பவுண்ட், அயர்லாந்தில் உள்ள மற்றொரு வங்கிக்கு 23 ஆயிரம் பவுண்ட் என மொத்தம் 44 லட்சம் பவுண்ட் அளவிற்கு முறைகேடாக பண பரிவர்த்தனை மேற்கொண்டார்.

இந்த முறைகேட்டிற்காக FERA சட்டப்பிரிவுகள் 8(1), 9(1)(a) மற்றும் 14-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பல்வேறு போராட்டத்திற்கு பிறகு நவம்பர் 2, 1995 அன்று கைது செய்யப்பட்டார். அந்த கைதும் கூட, சாதாரணமாக இல்லை; கடந்த மாதம் சசிகலா அவர்கள் சிறை செல்லும்போது எப்படி சொகுசுககார்கள் புடைசூழ பிக்னிக் போவது போல பெங்களூர் சென்றாரோ, அதுபோலவே திரு.தினகரனும் நான்கைந்து மாத அலைக்கழிப்பிற்குப் பிறகு பெரும் தொண்டர் படையுடன் சென்று சரணடைந்தார். அந்த 22 வருட வழக்கில் தான் அவருக்கு சமீபத்தில் ரூ.25 கோடி அபராதம் (ரூ.31 கோடி அபராதத்தில் ஆரம்பித்தது) விதிக்கப்பட்டது. இந்த வழக்கின் சுவாரசியமான விசாரணை, தினகரனின் தில்லாலங்கடி பற்றியெல்லாம் பார்க்கும் முன் மற்றுமொரு விசித்திரமான வழக்கு பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். அதுதான், சொத்துக்குவிப்பு வழக்கில் தினகரன் இருந்த கதை.

தினகரன் மீதான மோசடி வழக்குகள் ஒவ்வொன்றாய் வெளிவர, வெளிநாடுகளில் அவர் வாங்கியிருந்த சொத்துக்கள் பற்றிய கணக்கீடு எடுத்தபோது சிக்கியது, தினகரன் பெயரில் இருந்த ஸ்லாலி ஹால் (Slaley Hall) மாபெரும் சொகுசு ஹோட்டல். ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த பிரசித்திபெற்ற ஹோட்டல், அன்றைய மதிப்பிலேயே சுமார் ரூ.280 கோடி; அதன் உரிமையாளராக இருந்தார் தினகரன் என்பது விசாரணை அதிகாரிகளையே மிரள வைத்தது. பின்னர், இதில் ஜெயலலிதாவும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவர, ஜெயாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் இதுவும் சேர்க்கப்பட்டு, ஐந்தாவது குற்றவாளியாக திரு.தினகரனும் சேர்க்கப்பட்டார். ஆனால், இதன் மீதான சாட்சி்கள் யாவும் வெளிநாடுகளில் இருப்பதால் சொத்துக்குவிப்பு வழக்கு இழுத்தடிக்கப்படலாம் என்ற ஒரே காரணத்திற்காக, கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் திரு.ஆச்சாரியாவால் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இம்மாதிரியான இமாலயத்தொகை வழக்குகளில் எல்லாம் டிடிவி தினகரன் சிக்கினாலும், தொடர்ந்து பல தில்லுமுல்லுகள் மூலம் இவற்றையெல்லாம் சமாளித்து வந்தார். அதுபற்றிய தகவல் அடுத்த பதிவில்.

(தொடரும்...)

Sunday 19 March 2017

யார் இந்த டிடிவி தினகரன்? - தினகரன் ஆகிய நான் - பகுதி 1

தினகரன் ஆகிய நான் - 1
--
யார் இந்த டிடிவி தினகரன்?
--
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

புதிய ஆட்சி பதவியேற்று 10 மாதங்களுக்குள் நான்காவது முதல்வரை காண்கின்ற ஒரு அரிய வாய்ப்பில் உள்ளது தமிழகம். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார் என தெரிந்தே செல்வி.ஜெயலலிதாவை முதல்வராக்கியது மக்கள் செய்த தவறு என்றால், அதிகார ஆசையில் திருமதி.சசிகலா நடத்தியது, தற்போது நடத்திக்கொண்டிருப்பது யாவும் மக்களுக்கு கிடைத்த தண்டனை எனலாம். கூவத்தூர் கூத்துகள் துவங்கி, ‘துக்கத்தைக்கூட தூக்கலாக’ வாசித்த நிதி அமைச்சரின் நேற்றைய நிதிநிலை அறிக்கை வரை அனைத்தும் இதற்கு நல்ல உதாரணம்.
சசிகலா முதல்வரா? என்று நாமெல்லாம் பொங்கிக் கொண்டிருந்த வேளையில் சரியான நேரத்தில் ‘தாமதமான’ தீர்ப்பு வர, ஒருவழியாக சசிகலாவிடம் இருந்து தமிழகம் தப்பியது. ஆனால், சிறைக்கு செல்லும் முன் திரு.டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக ஆக்கி கட்சியில் தன் ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டார். அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்று கணிப்பதற்குள், தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட களமிறங்கிவிட்டார், திரு.டிடிவி தினகரன் - ஜெயலலிதாவின் அதே ஆர்கே நகர் தொகுதியில்.
யார் இந்த டிடிவி தினகரன்? - இளம் வயதிலேயே அந்நிய செலாவணியில் கோடிக்கணக்கில் முறைகேடாக பண பரிவர்த்தனை செய்து பொருளாதார குற்றவியல் துறையினரையே வாயடைக்க வைத்த மாபெரும் அவதார புருஷர். அவரது ‘பெரும்புகழை’ பேசும் முன் அவர் பற்றிய அறிமுகம் - திருமதி.சசிகலாவின் சகோதிரி வனிதாமணிக்கு பிறந்த மூன்று மகன்களில் மூத்தவர் தான் இந்த தினகரன். ஜெயாவின் நெருங்கிய தோழியாக சசிகலா அறியப்பட்ட பின், அவர் மூலமாக 1988 முதல் ஜெ.வின் நம்பிக்கைக்கு உரியவராக அறியப்பட்டவர்.
பின்னர், ஒரு சில முறை அதே ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டாலும், மன்னார்குடி மாஃபியா என்றழைக்கப்படும் சசிகலா குடும்பத்தினரின் ஒரே நேரடி அரசியல்வாதி இவர் மட்டும்தான். தனது 40வது வயது வரை பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திக் கொண்டவர் (BE Civil Incomplete) என விசித்திரமான கல்வித்தகுதி கொண்ட இவர், தற்போது தன்னை MBA பட்டதாரி என்று கூறிக்கொள்கிறார். 1991-96 வரை நடைபெற்ற அந்த ‘பொற்கால ஆட்சியில்’ வெளிநாடுகளில் தங்கியிருந்து இங்கு நடக்கும் கொள்ளைகளுக்கு பல வகையிலும் உடந்தையாக இருந்தார்.
இவரது தம்பிமார்கள் டிடிவி சுதாகரனும், டிடிவி பாஸ்கரனும் உள்ளூரிலே சொத்துக்கள் வளைத்துப்போடுவது, அடித்துப் பிடுங்குவது என பிஸியாக இருக்கும்போது, இவரோ சிங்கப்பூர், இங்கிலாந்து என நாடுவிட்டு நாடு பாய்ந்து மோசடியாக சேர்த்த பணத்தையெல்லாம் ஹவாலா மோசடி மூலம் வெள்ளையாக்கிக் கொண்டிருந்தார். இந்த டிடிவி (TTV - திருட்டு தீவிரவாதிகள் வென்டர்ஸ் என்ற அர்த்தமும் உள்ளதாம்) பிரதர்ஸின் ஒட்டுமொத்த வழிகாட்டிகள் மாண்புமிகு அம்மா மற்றும் மாண்புமிகு சின்னம்மா தான் என்கிறது ஊழல் தடுப்பு பிரிவு, அமலாக்கத் துறை, சிபிஐ, டிஜிஏசி, போன்ற அமைப்புகள்.
ஊழலில் இவ்வாறு கைதேர்ந்த அனுபவம் பெற்ற பின், திரு.தினகரன் பெரியகுளம் மக்களவை தொகுதியில் 1999-ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அந்த காலத்தில் இவரது முன்னாள் தளபதியும் இன்னாள் எதிரியுமான திரு.பன்னீர் செல்வத்துடன் பழக்கம் ஏற்பட்டு, முதன்முறையாக ஓபிஎஸ் முதல்வர் ஆனார். பின்னர் 2004-ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். உடனடியாக அதே ஆண்டு அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2010 வரை நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தார்.
பின்னர், 2011-ல் சசிகலா போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேறும்போது, ‘அந்த 17 பேருடன்’ சேர்ந்து இவரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், செல்வி.ஜெயலலிதாவின் இறப்பு வரை ஓரங்கப்பட்டு கண்காணாமல் போயிருந்த இவர்தான், இன்று தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று அதிமுகவினரே அடித்துக் கூறுகின்றனர். திரு.பன்னீர்செல்வத்திற்கு பயந்து நடைபெற்ற ‘ஆபரேஷன் கூவத்தூர்’ எனும் சரித்திர போராட்டத்தின் கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் என அனைத்தும் இவர்தான் என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம். அட.. இப்படிப்பட்டவரா இவர் என்கிறீர்களா? இன்னும் அண்ணாரது வழக்கு விவரங்கள் பற்றியெல்லாம் கேள்விப்பட்டால் என்ன சொல்வீர்கள்..?
(தொடரும்…)