Wednesday 4 May 2016

மதுவிலக்கினால் ஏற்படும் 30ஆயிரம் கோடி இழப்புக்கு மாற்று வழி

மதுவிலக்கினால் ஏற்படும் 30ஆயிரம் கோடி இழப்புக்கு மாற்று வழி... செந்தில் ஆறுமுகம்
https://minnambalam.com/k/1460419235
கடந்த பல ஆண்டுகளாக, மதுவிலக்குக் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது, இது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்ற கருத்து பரவலாக விவாதத்துக்கு உள்ளானது. இன்று அதிமுக, திமுக மட்டுமல்லாமல் அனைத்துக் கட்சிகளுமே, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம்! என்று அறிவித்துவிட்டன. இது, காந்தியவாதி சசிபெருமாளின் உயிர்த் தியாகத்துக்கும், பல்வேறு சமூக அமைப்புகளின் போராட்டத்துக்கும் கிடைத்த வெற்றி. இந்தச் சூழலில் மதுவிலக்கை அமல்படுத்துவதால் ஏற்படும் ரூ. 30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஈடுகட்டும் வழிமுறைகள்குறித்து புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆராய்வோம்.
1. செலவுகளைக் குறைப்பது, 2. வரவுகளை அதிகரிப்பது, 3. குடிப்பதற்காக செலவழிக்கப்படும் பணம், பிற செலவினங்களில் செய்யப்படும்போது அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும்.
செலவுகளைக் குறைப்பது:
இப்போது அரசுக்கு உள்ள செலவுகள் என்ன என்று பார்ப்போம். 2015-2016 பட்ஜெட் அடிப்படையில், தமிழக அரசின் வருவாய் செலவினம் ரூ. 1,47,297 கோடி (Revenue Expenditure) இந்தச் செலவுகளை நான்கு வகையினங்களில் அடக்கிவிடலாம்.
1. அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்சன் (41%)
2. இலவசங்கள், மானியங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை (40%)
3. இலவசங்களை வினியோகிக்க, பரமாரிக்க ஆகும் செலவு (7%)
4. வாங்கிய கடனுக்குக் கட்டும் வட்டி (12 %)
மேற்சொன்ன நான்கு வகையினங்களில் எந்தச் செலவை குறைக்கலாம்?
முதலாவதாக, 2015-16 பட்ஜெட்டில் ரூ.1,47,297 கோடி செலவில் அரசு ஊழியர் சம்பளம் (ரூ. 41,215 கோடி), பென்சன் (ரூ. 18,667 கோடி) என மொத்தம் ரூ. 59,882 கோடி இந்தவகையில் செலவாகிறது (41%).
இரண்டாவதாக, 2015-2016ல் இலவசங்களுக்கும், மானியங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தொகை: ரூ.59185. இது பட்ஜெட்டில் 40%.
2011 முதல் 2016 வரையான காலகட்டத்தில், மிக்சி-கிரைண்டர்-பேன், ஆடு-மாடு, திருமண உதவி-தாலிக்குத் தங்கம், லேப்டாப் போன்ற இலவசத் திட்டங்களால் சராசரியாக வருடத்துக்கு ரூ. 3750 கோடி.
உணவு மற்றும் மின்சார மானியம்:
அனைவருக்கும் 20 கிலோ அரிசி கொடுக்கும் உணவு மானியத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால் ரூ. 1660 கோடி சேமிக்கலாம்.
உணவு மானியத்தில் கடைப்பிடித்த அதேமுறையில் கணக்கிட்டால் தற்போது செலவழிக்கப்படும் ரூ. 22,430 கோடி மானியத்தில் (2015-16) ரூ. 1495 கோடி குறைக்கலாம்.
மூன்றாவதாக உள்ள ‘இலவசங்களை வினியோகிக்க, பராமரிக்க ஆகும் செலவு’ என்ற வகையிலானது. அனாவசியமான இலவசங்களைத் தவிர்த்தால் இதில், 50% குறைந்தாலே வருடத்துக்கு ரூ. 4244 கோடி மிச்சமாகும்.
நான்காவதாக உள்ள செலவினம், வாங்கிய கடனுக்குக் கட்டும் வட்டி.
பன்னாட்டு நிதி நிறுவனங்கள், உலக வங்கியிலிருந்து கடன் வாங்குவதைக் குறைத்துவிட்டு எல்.ஐ.சி, நபார்டு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன் வாங்கும்போது வட்டி கணிசமாகக் குறையும். இதைச் செய்வதால், ஆண்டுக்கு பலநூறு கோடிகள் மிச்சமாகும்.
1. உடனடியாகச் செய்ய வேண்டியது:
அனாவசியமான இலவசத் திட்டங்களை அறிவிக்காமல் இருக்க வேண்டும். மானியங்களில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும். இதனால், வருடத்துக்கு மிச்சமாவது ரூ. 11,149 கோடி.
2. எதிர்காலத்தில் செய்யவேண்டியது:
ஆண்டுதோறும் தரும், வட்டித் தொகையை குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும். இதனால், வருடத்துக்கு மிச்சமாகும் தொகை ரூ. 893 கோடி.
இந்த வழிமுறைகள்மூலம் மொத்தத்தில் ரூ. 12,042 கோடி மிச்சமாக்கலாம். வட்டித் தொகையை குறைக்க வாய்ப்பில்லை, மின்சார, உணவு மானியத்தை மேற்சொன்ன அளவுக்குக் குறைக்க வழியில்லை என்றநிலையிலும் குறைந்தபட்சமாக பத்தாயிரம் கோடிக்குமேல் மிச்சமாவது நிச்சயம்.
அதாவது, அனாவசிய இலவசப் பொருட்களைத் தவிர்த்து, மானியங்கள் வழங்குவதில் உள்ள முறைகேடுகளைக் களைந்தாலே பட்ஜெட்டுக்கு ரூ.10,000 கோடி கூடுதலாகக் கிடைக்கும். இது, டாஸ்மாக்கில் சம்பாதிக்கும் வரித் தொகையில் (ரூ.29,672) மூன்றில் ஒரு பங்கை ஈடுகட்டும் (33%).
தமிழகத்தின் சொந்த வரி வருவாயான ரூ. 96,082 கோடியில், ரூ. 72,068 கோடி விற்பனை வரிமூலம் வருகிறது. டாஸ்மாக்மூலம் வரும் விற்பனை வரியைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், தமிழகத்தின் தற்போதைய விற்பனை வரியானது கிட்டத்தட்ட, ரூ. 50 ஆயிரம் கோடி என்ற அளவில்தான் உள்ளது.
வரிஏய்ப்பைக் குறைத்தால் அரசுக்கு கணிசமான விற்பனை வரி அதிகரிக்கும். தொழில் முனைவோர்களிடம் பேசியபோது, 20% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனர். விற்பனை வரி வசூலில் முனைப்புக் காட்டினால் அரசுக்குக் கூடுதலாக ரூ. 5000 கோடி கிடைக்கும்.
டாஸ்மாக் தொடர்பான விற்பனை வரிக்கு வருவோம்.
2015-16 டாஸ்மாக்மூலம் அரசுக்கு வரவுள்ள மொத்த வரியானது ரூ. 29,672 கோடி. இதில், ரூ. 22,375 கோடி விற்பனை வரியாகவும், ரூ. 7297 கோடி கலால் வரியாகவும் வருகிறது. இந்த ரூ. 29,672 கோடி வருவாய் இழப்பை ஈடுகட்டுவது எப்படி என்பதுதான் மதுவிலக்கு விவாதத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது.
மதுவிலக்கை அமல்படுத்தியபிறகு, டாஸ்மாக் கடைகளுக்குச் சென்றுகொண்டிருந்த பல ஆயிரம் கோடிப் பணத்தில் பெரும்பகுதியானது, வேறு வகைகளில் செலவழிக்கப்படும் (உடைக்கோ, உணவுக்கோ, இன்னபிற). அப்படி, பிற வகைகளில் செலவழிக்கப்படும்போது அரசுக்குக் கிடைக்கும் விற்பனை வரியானது அதிகரிக்கும். இந்த விற்பனை வரி அதிகரிப்பு, டாஸ்மாக்மூலம் கிடைக்கும் வரி வருவாயில் (ரூ. 29,672 கோடி) 20% ஆக இருந்தால்கூட ரூ. 5934 கோடி கிடைக்கும்.
மக்கள் இதுவரை சாராயத்துக்குச் செலவழித்த பணத்தை உணவுப் பொருட்கள், துணி, வீட்டு உபயோகப் பொருட்கள் போன்று வேறு ஏதேனும் வாங்குவதற்குச் செலவழிப்பர். அப்படிப் பொருட்கள் வாங்கும்போது அதில் சிறுதொகையை வரியாக, விற்பனை வரியாகச் சேர்த்துவிட்டல் அரசுக்கு அதிலிருந்து கூடுதல் வரி வருவாய் வரும். இந்த அடிப்படையில், இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ராஸ் மாகாணத்தில் 1937ல் விற்பனை வரியை ராஜாஜி கொண்டுவந்தார். ( பம்பாய் மாகாணத்தில் 1938ல் தான் விற்பனை வரி அறிமுகமானது)
ஆக, விற்பனை வரியை முறையாக வசூலிப்பதன்மூலம் ரூ. 5000 கோடியும், மதுவுக்காகச் செலவிடப்பட்ட பணமானது வேறு வழிகளில் செலவிடப்படும்போது, கூடுதலாகக் கிடைக்கும் விற்பனை வரியாக ரூ. 6000 கோடியும் கிடைக்கும் என்று தெரிகிறது. மொத்தத்தில் ரூ. 11,000 கோடி. இது, டாஸ்மாக்மூலம் கிடைத்துவந்த வரி வருவாயில் (ரூ. 29,672) மூன்றில் ஒரு பங்கை ஈடுகட்டும் (37%).
ஆகவே, மதுவிலக்கை அமல்படுத்தினால் பட்ஜெட்டில் ரூ. 30 ஆயிரம் கோடி துண்டுவிழும் என்பதெல்லாம் மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ‘தெரிந்தே சொல்லும் அப்பட்டமான பொய்’.
டாஸ்மாக் வருமானம்மூலம் அரசு கஜானாவை நிறைத்துவிட்டால், விற்பனை வரி மற்றும் பிற சட்டங்களைக் காட்டி, மிரட்டி வணிகர்களிடம் பெருந்தொகையை லஞ்சமாகப் பெறுவது எளிது. நாம் அறிந்தவரை, வணிகர்கள் முறையாக வரி கட்டத்தான் விரும்புகிறார்கள். ஆனால், அரசு அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் சிக்கலான வியாபார விதிமுறைகள், வரி விதிப்பை எளிதாக்க முன்வருவதில்லை. ஆகவே, வணிகர்கள் வேறு வழியில்லாமல் லஞ்சம் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.
அரசுக்கு புதிய வருவாய் வழிகள்:
மதுவிலக்கை அமல்படுத்தினால் டாஸ்மாக் வருமானம் ரூ. 30 ஆயிரம் கோடி போய்விடும் என்று பதறும் தமிழக அரசுக்கு, மாற்று வருவாய் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி ‘‘தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம்” (த.பொ.மூ.பொ.ச.) ரூ. 5 லட்சம் கோடி வருவாய்க்கும், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தரும் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்தக் கையேடு, 24-07-2015 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிடப்பட்டது.
அந்தக் கையேட்டில் உள்ள திட்டங்களில் சில குறிப்பிட்ட திட்டங்கள்:
உள்ளாட்சி அமைப்புகளில் (பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி) உள்ள ஏரிகள், கண்மாய்கள், குளங்களின் வண்டல் மண்ணை தூர்வார வெளிப்படையான ஏலம்விடுவதன்மூலம், ரூ. 5000 கோடி கிடைக்கும். இதனால் நிலத்தடி நீரும் பெருகும்.
இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களுக்குச் சொந்தமான விளைநிலங்கள் மற்றும் வாடகை இடங்களில் முறையாக வரி/கட்டணம் வசூலிப்பதன்மூலம் ரூ.5000 கோடி.
இலட்சக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலங்களை முறையாகப் பயன்படுத்துவதன்மூலம் ரூ.10,000 கோடி.
வீட்டுமனை உருவாக்கத் திட்டம் (Housing Layouts), கட்டட அனுமதி, சொத்துவரி போன்றவற்றை முறைப்படுத்துவதன்மூலம் ரூ. 3.5 லட்சம் கோடி.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலம், மின்சாரம், தண்ணீர் போன்றவற்றை மிகக் குறைந்த விலைக்குத்தரும் கொள்கையில் மாற்றம் செய்வதால் ரூ. 20,000 கோடி.
சுற்றுலாத் தலங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவதன்மூலம் கூடுதல் வருவாய் ரூ.5000 கோடி.
இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பொதுஇடத்தில் நிறுத்துவதற்குக் கட்டணம் வசூலிப்பதன் மூலம் ரூ. 10000 கோடி.
இதில், 10% தொகையான ரூ. 50 ஆயிரம் கோடி கிடைத்தாலேபோதும்; டாஸ்மாக் வருமானம் இல்லாமல் அரசை நடத்திவிடலாம். கூடுதல் வருவாயை வேறு மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.
இயற்கை வளங்களை முறையாக நிர்வகிப்பதின்மூலம் புதிய வருவாயைப் பெறமுடியும் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும், தமிழகம் நன்கறிந்த சமூகப் போராளியுமான முகிலன். அவர் முன்வைக்கும் மாற்று வருவாய்த் திட்டம்:
ஆற்று மணல் குவாரிகளை முறைப்படுத்துவதன்மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் ரூ. 13,100 கோடி.
தாதுமணல் விற்பனையின்மூலம் கூடுதல் வருவாய் ரூ. 14,560 கோடி.
கிரானைட் விற்பனையின்மூலம் ரூ. 10,950 கோடி.
மொத்தம் ரூ. 38,610 கோடி.
தனியாரிடம் இல்லாமல் அரசே இயற்கை வளங்களை நிர்வகிக்கும்போது அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும்; சுற்றுச்சூழலும் காக்கப்படும்.
ஒரு நல்ல அரசாங்கம் நியாயமான வழிமுறைகளின்மூலமும், நியாயமான வரிகளின்மூலமும் எவ்வளவு நிதி திரட்டமுடிகிறதோ, அதை வைத்துத்தான் பட்ஜெட் போடவேண்டும். திருட்டுத் தொழில் செய்து சொகுசு வசதியோடு வாழ்ந்த குடும்பம், நியாயமாக வாழ விரும்பினால் ஆடம்பரங்களைத் தவிர்த்து, உள்ளதை வைத்துத்தான் வாழவேண்டும். ஆடம்பர வசதி கிடைத்தால்தான் ஒழுக்கமாக வாழ்வேன் என்ற வாதத்தை ஏற்கமுடியாது. ஆக, சாராய வருமானம் இல்லாமல் ஆட்சி நடத்தவேண்டும் என்பது தார்மீகரீதியில் அவசியம். சாராய வருமானம் இல்லாமல் ஆட்சி நடத்தமுடியும் என்பது பொருளாதாரரீதியில் சாத்தியம்.

No comments:

Post a Comment